சோழர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அநபாயன் என்ற மன்னன் சீறும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
ஒரு நாள் அவனுக்கு சில சந்தேகங்கள் வந்தன. உலகை விட பெரியது எது? கடலை விடப் பெரியது எது? மலையை விடப் பெரியது எது? என்பது தான் சந்தேகம். வெகுநேரம் சிந்தித்தும் அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளை காணமுடியவில்லை. மூன்று சந்தேகங்களையும் ஓர் ஓலையில் எழுதி அந்த ஓலயை உடனடியாக தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி அதற்குறிய பதிலை தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டான்.தொண்டை மன்னனும் சிறந்த அறிவாளி; தமிழ் பற்று மிக்கவன் . அவனாலும் இக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. எனவே, மன்னன் தன்னுடைய அரசகவி வெள்ளியங்கிரி முதலியாருக்கு இந்த ஓலையை அனுப்பி வைத்தான்.
”புலவரே..... சோழ மன்னனின் இந்த சந்தேகங்களை தீர்த்துவைத்தால்
தொண்டை நாட்டு புலவர்களின் அறிவுத் திறன் கண்டு தொண்டை நாட்டுக்கு புகழும் பெருமையும் உண்டாகும்!’’ என்று குறிப்பிட்டிருந்தான்.
அரச கவியும் அக்கேள்விகளைப் பற்றி நீண்ட நேரம் சிந்தனை செய்தும் எதுவும் புலப்படவில்லை. அரச கவியான தனக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியாததால் அவமானத்தால் கூனிக் குறுகினார். இவரது மகன் அருண் மொழித் தேவர் இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்தவன், சிறந்த அறிவாளி. தந்தை கவலையுடன் இருப்பதை கண்டான். “தந்தையே ஏன் உங்கள் முகமிப்படி சோர்ந்து போயிறுக்கிறது. என்ன பிரச்சனை தந்தையே ... சொல்லுங்கள்!” என்றான். “மகனே ... தொண்டை நாட்டு மன்னருக்கு மூன்று சந்தேகங்கள் வந்துள்ளன. அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டும் என்று மன்னர் ஓலை அனுப்பி இருக்கிறார்.அந்தக் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை மகனே!அதுதான் மனதுக்கு கவலையாக இருக்கிறது! என்றார். “ அப்பாஅந்த கேள்விகளை என்னிடம் கூறுங்கள். என்னால் முடிந்த பதிலை கூறுகிறேன்!” என்றார்.
”மகனே... அவை மிகவும் சிக்கலான கேள்விகளப்பா!” என்றார். தந்தையே... திருக்குறளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு. அதில் இல்லாத கருத்துக்களே இல்லை. எனவே, நீங்கள் சொல்லும் கேள்விகளுக்கு என்னால் நிச்சயமாக பதில் சொல்ல முடியும்!”. ”மலையை விடப் பெரியது எது?”
“தந்தையே!”
”நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும், மானப் பெரிது”. இந்தக் குறளின் அர்த்தம். தன்னுடைய நிலை அறிந்து அடக்கமாக வாழ்பவன் எவனோ, அவன் மலையை விடப் பெரிதாக தோற்றம் அளிப்பான்!”.இந்த பதிலில் மனம் மகிழ்ந்த கவிஞர் இரண்டாவது கேள்வியை கூறினார்.
”கடலை விடப் பெரியது எது?”
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்
தூக்கின் நன்மை கடலிற் பெரிது .”
பயன் கருதாமல் செய்த உதவியுடைய தன்மையை ஒருவன் ஆரய்ந்து பார்த்தால் அது கடலை விடப் பெரியதாகும்.
“ஆஹா... அற்புதம் மகனே!”
மூன்றாவது கேள்வியை கூறினார்.
“ உலகைவிடப் பெரியது எது?”
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மானப் பெரிது”.
தக்க சமயத்தில் செய்யப்பட்ட உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகை விட மிகவும் பெரியதாகும், என்றார்.
“அருமை மகனே என்னைக் காப்பாற்றி இந்த தொண்டை மண்டலத்தின் புகழை காப்பற்றினார்.தொண்டை மண்டல மன்னனின் புகழையும் நிலை நிறுத்தினாய்,”என்று பாராட்டினார்.
அந்த பதில்களை ஓர் ஓலையில் எழுதி தொண்டை மண்டல மன்னனுக்கு அனுப்பி வைத்தார். மன்னன் அதைக் கண்டு புகழ்ந்து போற்றி, சோழ மன்னன் அநபாயனுக்கு அந்தபதில்களை அனுப்பி வைத்தார். அநபாயன் அவற்றைக் கண்டு பெருமகிழ்வுற்றான். அந்த பதில்களை கூறிய அம்மேதையை நேரில் காண விரும்பினான். வீரர்கள் தொண்டை மண்டலம் சென்று மன்னனிடம் விசாரித்து, அருண் மொழித்தேவனை அரசர் முன் அழைத்து வந்தனர்.
அருண் மொழித் தேவரை சோழ மன்னன் மிகவும் பாராட்டினார். அவருக்கு “உத்தம சோழன் ‘ என்ற பட்டத்தையும் அளித்தான். அது மட்டுமின்றி அவரை தன் முதலமைச்சராகவும் ஆக்கினான். அந்த அருண் மொழித் தேவர் தான் பிற்காலத்தில் “சேக்கிழார்” என்ற பெயரில் புகழப்பட்டார்.
நன்றி-தினமலர் சிறுவர்மலர் 31-10-2008
No comments:
Post a Comment